Tamil Nadu government has decided to set up a new Siddha University (the place is not decided), and also a Siddha Medical College at Palani. 

1924 ஆம் ஆண்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் பனகல் அரசரால் பாரம்பரிய மருத்துவக்கல்வியை முறைப்படுத்த ஒரு கல்லூரி ஆரம்பிக்க இடம் ஒதுக்கப்பட்டு நிதியும் ஒதுக்கீடும் செய்யப்பட்டது. 1925 ஆம் ஆண்டு 'School of Indian Medicine' என்ற இந்திய மருத்துவப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. அங்கு பயின்றவர்களுக்கு L.I.M என்ற பட்டம் வழங்கப்பட்டது.

பின்னர் நாடு சுதந்திரம் அடைந்த 1947 ஆம் ஆண்டு உஸ்மான் கமிட்டி, சோப்ரா கமிட்டி, பண்டிட் கமிட்டி பரிந்துரைகளின்படி இந்தக் கல்வி நிறுவனத்தின் பெயர் ' College of Indian Medicine' என்று மாற்றப்பட்டது. வழங்கப்பட்ட பட்டமும் G.C.I.M என்று மாற்றப்பட்டது. 1948 ஆம் ஆண்டு கீழ்ப்பாக்கத்தில் இயங்கி வந்த இந்த மருத்துவக்கல்லூரி கல்வி முறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. அதன்படி G.C.I.M படிப்பில் சேரும் மாணவர்கள் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி என்ற மூன்று பாரம்பரிய மருத்துவமுறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், அனைவர்க்கும் பொது பாடமாக அலோபதி மருத்துவமுறை கற்பிக்கப்படும் என்ற திருத்தம் கொண்டு வரப்பட்டது.

1953 ஆம் ஆண்டு இந்தக் கல்லூரியின் பெயர் 'College of Integrated Medicine' என்று மாற்றப்பட்டது. பட்டப்படிப்பிற்கான காலம் நாலரை ஆண்டுகள், பயிற்சி மருத்துவத்திற்கான காலம் ஓராண்டு என்றும் MBBS படிப்புக்கு நிகராக கல்வி முறை மாற்றப்பட்டது. மாணவர்கள் அலோபதி மருத்துவமோ அல்லது தாங்கள் தேர்ந்தெடுத்து பயின்ற பாரம்பரிய மருத்துவ முறையிலோ பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

1960 ஆம் ஆண்டு இந்த பட்டப்படிப்பு MBBS பட்டப்படிப்பாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதுவரை செயல்பட்டு வந்த College of Indian Medicine மூடப்பட்டது. அப்போது GCIM படித்து கொண்டிருந்த மாணவர்களில் முதலமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் MBBS பட்டப்படிப்பில் சேர்த்துகொள்ளப்பட்டனர். சீனியர் மாணவர்களுக்கு மட்டும் D.M&S என்ற பட்டம் வழங்கப்பட்டது. இவ்வாறு பாரம்பரிய மருத்துவமுறைகளை பயிற்றுவிக்கத் தோற்றுவிக்கப்பட்ட கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி முழுவதும் அலோபதி மருத்துவக்கல்லூரியாக மாற்றப்பட்டது.

சித்த மருத்துவத்தை பயிற்றுவிக்க ஒரு கல்லூரி நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டது. மூலிகை வளம் மிகுந்த பகுதி, சித்தர்கள் வாழ்ந்த பொதிகை மலை அருகில் அமைந்துள்ளது, ஐந்து திணைகளும் உள்ளடக்கிய மாவட்டம் என்ற அடிப்படையில் குற்றாலத்தில் சித்த மருத்துவக் கல்லூரி அமைக்கத் திட்டமிடப்பட்டது.

ஆனால் இடம் தேர்வு செய்வதில் கால தாமதம் ஏற்பட்டதால் தற்காலிகமாக பாளையங்கோட்டை முனிசிபல் தாய் சேய் நல மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட்டது. அந்தத் தற்காலிக இடத்திலேயே போன்சாய் மரமாக சித்த மருத்துவ கல்லூரி வளர்ச்சிக்கான இடம் போதாமல் பற்றாக்குறையுடன் 57 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

அரசு வளர்ச்சிக்காக ஒதுக்கிய நிதியால் அந்தத் தற்காலிக இடத்தில் குறுகிய வளாகத்தில் உள்ள கட்டிடங்களை இடித்து அதே இடத்தில் புதிய கட்டிடங்களைக்கட்டும் கட்டுப்படுத்தப்பட்ட வளர்ச்சியே சாத்தியப்பட்டது. இதனால் சித்த மருத்துவக்கல்லூரி செயல்படுவதற்கான அடிப்படை விதிமுறைகளையும், போதிய உட்கட்டமைப்பு வசதியும் இல்லாமல் கல்லூரியின் அங்கீகாரமே ரத்து செய்யும் சூழல் உருவானது. இதனால் பல்வேறு காலகட்டங்களில் மாணவர்களே நேரடி பாதிப்புக்கு உள்ளாகினர். ஒவ்வொரு வருடமும் கல்லூரி தற்காலிக அங்கீகாரம் பெற்று தொடரும் சூழ்நிலை இருந்ததால், மாணவர்களுக்கு பல்கலைக்கழக தேர்வு எழுதுவதற்கு கிடைக்கும் அனுமதியில் கூட ஓர் உறுதியற்ற சூழல் நிலவியது.

இதனால் 50 வருடங்களுக்கும் மேலாக தற்காலிக இடத்தில் இயங்கி வரும் பாளை சித்த மருத்துவக்கல்லூரிக்கு திருநெல்வேலி நகரத்திற்கு அருகிலேயே பெரிய இடம் ஒதுக்கி தர வேண்டும் என்றும், பாளை சித்த மருத்துவக்கல்லூரி பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கையை வலியுறுத்தி 2004 ஆம் ஆண்டு முதல் பல்வேறு கட்ட போராட்டங்களை மாணவர்கள் தொடர்ந்தனர். பின்னர், மாணவர்களால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. உயர்நீதிமன்ற நீதியரசர்களும் மாணவர் கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து நெல்லையில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்க உத்தரவிட்டது. அப்போதைய அரசு இதை செயல்படுத்தாததால், மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அதிலும் சாதகமான தீர்ப்பை பெற்றனர். அதன் பின்னரும் நெல்லையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. 

தற்போது புதிய அரசு அமைத்து முதல் பட்ஜெட் அறிக்கையிலேயே சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான ஆணையும் முதல்கட்ட நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. 1924 ஆம் ஆண்டு ஆரம்பித்த சித்த மருத்துவக் கல்வி வரலாற்றில் இது ஒரு மைல்கல்.

Tamil Nadu Siddha University - https://www.thehindu.com/news/national/tamil-nadu/state-to-formulate-its-own-education-policy/article35905718.ece

Siddha Medical College at Palani - https://timesofathiban.com/15-highlights-of-the-budget-by-palani-murugan-temple-new-siddha-medical-college-to-be-started/amp/