கடலுார் : கடந்த முறை கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் சித்த மருத்துவம் நல்ல பலன் அளித்தது. தற்போது இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் மீண்டும் சித்த மருத்துவ முறையை கொண்டு வருமா என பொது மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கொரோனா 2வது அலை பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், மாவட்டத்தில் மொத்த பாதிப்பு இதுவரை 27 ஆயிரத்தைக் கடந்தது. தற்போது, கடலுார் அரசு தலைமை மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் மட்டுமே பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுவரை, 750 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தைச் சேர்ந்த 350 பேர் வெளியூர்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, அனைவருக்கும் அலோபதி மருத்துவ சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாரம்பரிய சித்த மருத்துவம் நல்ல பலன் அளித்துள்ளதைத் தொடர்ந்து, கடலுார், தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரியிலும், கடலுார் தனியார் கல்லுாரியிலும் மையம் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. 2,500 பேர் வரை சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர்.சித்த வைத்திய முறையில் சிகிச்சை பெற்றவர்களில் ஒரு உயிரிழப்பு கூட இல்லை.

இதனால், முதலில் சித்த வைத்தியத்தில் சிகிச்சை பெற தயங்கியவர்கள் கூட பின்னர் சித்த வைத்தியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கத் துவங்கினர்.மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்ததால், சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் மூடப்பட்டு, அலோபதி மருத்துவம் மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது.தற்போது தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை புதியதாக 1,411 பேருக்கு தொற்று உறுதியானதோடு 7 பேர் இறந்தனர். எனவே, மீண்டும் சித்த வைத்தியம் முறையிலான வைத்தியத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, பாதுகாப்பான சித்த மருத்துவ சிகிச்சை மையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பணியாளர்கள் பற்றாக்குறை மாவட்டத்தில் 45 இடங்களில் அரசு சித்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தலா 25 மருந்தாளுனர்கள், மருத்துவ பணியாளர்கள் இடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நிரப்பி விட்டு கொரோனா சிகிச்சை முகாம் அமைத்தால் மட்டுமே முழுமையாக இயங்க முடியும் என, ஆயுஷ் துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், 'கொரோனா சிகிச்சை முகாமிற்கு குறைந்தபட்சம் தலா 3 டாக்டர்கள், மருந்தாளுனர், மருத்துவ பணியாளர்கள் தேவைப்படுவார்கள். எனவே, தற்காலிக மாவது இப்பணியிடங்களை நிரப்பிய பின் சிகிச்சைக்கான முகாம் அமைக்கப்பட வேண்டும். சித்த வைத்தியத்திற்கு வழங்கும் கஷாயம், உணவு தயாரிக்க கூடுதல் பணியாளர்கள் வழங்கினால் முழு திறனுடன் செயல்பட முடியும்' என்றனர்.