Home » e-Store » நலம் காக்கும் சித்த மருத்துவம் (நோய் அணுகாமை)

நலம் காக்கும் சித்த மருத்துவம் (நோய் அணுகாமை)

ப.செல்வசண்முகம், எம்.டி (சித்தா), பிஎச்.டி.


Quantity: Preview Book Review

DESCRIPTION:


நலம் காக்கும் சித்த மருத்துவம்


எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய் -குறள் 429


நோய் வரும் காரணங்களைத் தெளிவாக அறிந்து அவற்றினை முழுமையாக நீக்கி உடலைப் பாதுகாத்துக் கொள்ளும் அறிவினைப் பெற்றவர்களுக்கு உள்ளம் அதிரும்படியான நோய் வருவதில்லை என வள்ளுவர் கூறுகின்றார். இந்தக் குறள் காட்டும் பொருளை மையக் கருத்தாகக் கொண்டதே நலம் காக்கும் சித்த மருத்துவம்.


நோயில்லா நலமான வாழ்வினை அடைய விரும்பாதவர் எவரும் இல்லை. நம் உடல் நலத்தோடு இயங்குகின்றது. இதே உடல்நலம் எப்போதும் நீடிக்கும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். இந்த எண்ணம் உயர்ந்ததுதான். அதற்கான அடிப்படைச் செயல்களை நம்மில் எத்தனை பேர் செய்து வருகின்றோம்?


முறையான வாழ்வியல் முறைகளைக் கடைப்பிடிக்காதவர்கள் (சில மருத்துவர்கள் உட்பட) ஒவ்வொரு நாளும் நலத்தினை இழந்து வருகின்றோம். நோய் நிலைகள் மட்டுமே உடல் நலத்தினைக் கெடுக்கும் என்பதில்லை. இக்காலத்தில் உடலிற்கு நல்லது என்று நாம் எண்ணிக் கொண்டுள்ள சில உணவுகளும், செயல்களும் தொடர்ச்சியாக உடல்நலக் குறைவினை ஏற்படுத்திக் கொண்டுள்ளன என்பது பலருக்குத் தெரியாத உண்மை.


இது தவிர ஒவ்வொரு விதமான நோய்களும் வெவ்வேறு விதமான உடல் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. ஒரு நோய் உடலை விட்டு நீங்கிவிட்டதாக நாம் எண்ணிக் கொண்டிருக்கும்போது அந்த நோயினுடைய பின் விளைவுகள் வெளியில் தெரியாத சில நலக்குறைவுகளை உடலில் ஏற்படுத்துகின்றன. அவற்றை நீக்குவதற்காக உடல் தொடர்ச்சியாக முயற்சி செய்து கொண்டிருக்கும். அந்த முயற்சிகளுக்கு இடையூறு செய்யாமல் உதவி செய்தால் நலக்குறைவு நிலை விரைவில் சீராகிவிடும். அது போன்ற நிலைகளில் என்ன செய்ய வேண்டும் எதனைச் செய்யக்கூடாது என்பதனை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


"நோயில்லாப் பெருவாழ்வு" என்பது மிக உயர்ந்த நோய்த்தடுப்பு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நமக்குக் கிடைக்கும். நோயில்லா வாழ்வியல் முறைகள் பற்றிய விழிப்புணர்வு நம் சமுதாயத்தில் குறைந்து கொண்டே வருகின்றது. நோய்த்தடுப்பு முறைகளைப் பற்றி மக்களிடம் வினாவினால் நோய்த் தடுப்பூசி (Vaccine) போட்டுக் கொள்வதைத்தான் கூறுகிறார்கள். உலகின் பல இடங்களில் நோய்த் தடுப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது போன்ற தோற்றம் இருக்கிறதே தவிர உடல்நலம் தொடர்பான முறையான அனுபவ அறிவு மக்களிடம் இல்லை.


பல நாடுகளில் உடல் நலத்திற்காகச் செலவிடப்படும் பணத்தில் மிகமிகக் குறைந்த அளவே நோய்த் தடுப்புத் திட்டங்களுக்காகச் செலவிடப்படுகின்றன. அவைகளும் கூட நோயினை முன்னரே கண்டுபிடிக்கத்தான் செலவிடப்படுகின்றன. சர்க்கரை நோய் (நீரிழிவு), மார்பகப்புற்று, இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வருவதை முன்னரே கண்டுபிடிப்பது மட்டுமே நோய்த் தடுப்பு முறைகளாகாது.


வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். - குறள்


வருமுன் காத்தல், வரும்போது காத்தல், வந்தபின் காத்தல் என்கிற மூன்று வகையான காப்பு முறைகள் உண்டு. இவற்றில் வருமுன் காத்தல் என்பதே மிகச் சிறந்ததும் செயல்படுத்த வேண்டியதுமாகும். வள்ளுவர் கூறியபடி நோய்க்கான காரணிகள் எவை என்பதை அறிந்து நோய்கள் நம் பக்கமே நெருங்காமல் பாதுகாத்துக் கொள்ளும் முறைகளை முழுமையாகத் தெரிந்து கொண்டு அவற்றை நம் வாழ்க்கை முறையோடு இணைத்துக் கொள்வதே நோயில்லா நல வாழ்வு.



<< Continue Shopping